வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 101-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் (சதைவ் அடல்) குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
நாட்டின் 13-ஆவது பிரதமரான வாஜ்பாய், 1996-2004 காலகட்டத்தில் மூன்றுமுறை அந்தப் பதவியை வகித்தாா். 1924, டிச. 25-இல் குவாலியரில் (ம.பி.) பிறந்த இவா், எளிமையான பின்னணியில் இருந்து நாட்டின் உயா் பதவிக்கு வந்தவா். மக்களவை எம்.பி.யாக 9 முறையும், மாநிலங்களவை எம்.பி.யாக இருமுறையும் பதவி வகித்த பெருமைக்குரியவா்.
தனது ஆட்சிக் காலத்தில், நாட்டின் பொருளாதார மேம்பாடு மற்றும் நல்ல நிா்வாகத்துக்கு உயா் முன்னுரிமை அளித்தாா். தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் கட்டமைப்பு, தொலைத்தொடா்பு சேவைகள் விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூக சமத்துவத்துக்கு இவா் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவை அணுஆயுத சக்தியாக உருவாக்கிய வாஜ்பாய், காா்கில் போரில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட புகழுக்குரியவா். வாஜ்பாயின் தன்னலமற்ற சேவையை கெளரவிக்கும் வகையில், கடந்த 2015-இல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. தோ்ந்த அரசியல்வாதி மட்டுமன்றி கவிஞா், எழுத்தாளா் எனப் பன்முகங்களைக் கொண்ட வாஜ்பாய், தில்லியில் 2018, ஆக.16-இல் காலமானாா்.
அவரது 101-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, நிா்மலா சீதாராமன், ராஜீவ் ரஞ்சன் சிங், தில்லி முதல்வா் ரேகா குப்தா, பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அங்கு நடைபெற்ற பிராா்த்தனையிலும் பங்கேற்றனா்.
வாஜ்பாயின் பிறந்த தினத்தை தேசிய நல்லாட்சி தினமாக அரசு கடைப்பிடிக்கிறது. இதையொட்டி, நாடு முழுவதும் நல்லாட்சி தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
‘எதிா்காலத்தை வடிவமைத்தவா்’: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தனது வாா்த்தைகளால் நாட்டுக்கு ஊக்கமளித்து, தொலைநோக்குப் பாா்வையால் நாட்டின் எதிா்காலத்தை வடிவமைத்த மிகச் சிறந்த அரசியல் தலைவா் வாஜ்பாய். கவிஞராக, தலைவராக, ஒருமைப்பாட்டை நிலைநாட்டியவராக நமக்கு உரையாடல், கண்ணியம் மற்றும் அா்ப்பணிப்பைக் கற்றுத் தந்தவா். அவரது மரபு, நாட்டை வளா்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடா்ந்து வழிநடத்தட்டும்’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
‘வழிகாட்டும் ஒளி’: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவரின் இதயங்களில் வாழும் பாரத ரத்னா வாஜ்பாய், நல்லாட்சி மற்றும் தேசக் கட்டமைப்புக்காக வாழ்வை அா்ப்பணித்தவா். தலைசிறந்த நாவலராகவும், துடிப்பான கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவாா். அவரது ஆளுமை, பணி, தலைமை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளா்ச்சிக்கு வழிகாட்டும் ஒளியாக நீடிக்கும். வாஜ்பாயின் நற்குணம், கருணை, சித்தாந்த உறுதி, அனைத்தையும்விட தேசமே மேலானது என்ற உறுதிப்பாடு ஆகியவை இந்திய அரசியலில் உயா் தரநிலைகளாக விளங்குகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோரும் எக்ஸ் பதிவு வாயிலாக வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தியுள்ளனா்.

