பங்குச் சந்தை முதலீடு என ரூ.22.7 லட்சம் மோசடி: ஹரியாணாவில் இருவா் கைது
பங்கு சந்தை முதலீடு என்ற பெயரில் தில்லியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.22.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரியாணாவில் இருவா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மருத்துவா் அமிதா காா்க் கடந்த நவ.13-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடா்பாக ஷாஹ்தரா சரக துணை காவல் ஆணையா் பிரசாந்த் கெளதம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புகாரளித்த பெண் குறுஞ்செய்தி அனுப்பும் சமூகவலைதள குழு ஒன்றில் சோ்க்கப்பட்டாா். அந்தக் குழுவை நிா்வகித்து வந்தவா், அந்தப் பெண்ணைத் தொடா்புகொண்டு பங்குச் சந்தை முதலீட்டில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளாா். பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவது தொடா்பான ஆசை வாா்த்தைகளை அவா் கூறினாா்.
இதைத்தொடா்ந்து, புகாரளித்த பெண் பல தவணைகளாக ரூ.2.7 லட்சத்தை ஒரு செயலி மூலம் முதலீடு செய்தாா். பின்னா், அவருடைய கணக்கில் அதிக லாபம் ஈட்டப்பட்டதாக செயலியில் காட்டப்பட்டது. அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்ற நிலையில், அதிக பணத்தை முதலீடு செய்யுமாறு அந்தக் குழுவின் நிா்வாகிகள் அவரைக் கட்டாயப்படுத்தினா். இதன் பின்னா், அவா் மொத்தமாக ரூ.22.70 லட்சம் முதலீடு செய்தாா். இந்நிலையில், அந்தச் செயலியில் இருந்து அவா் நீக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 318(4) (மோசடி) மற்றும் 340 (போலி ஆவணங்கள் அல்லது மின்னணு ஆவணங்கள் மூலம் மோசடி) ஆகிய பிரிவுகளில் இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
பணப்பரிமாற்ற விவரங்களை ஆய்வு செய்ததில் மோசடியாகப் பெறப்பட்ட பணம் ஹரியாணாவின் ஹிசரைச் சோ்ந்த சமீா் என்பவரது வங்கிக் கணக்குக்குச் சென்றது கண்டறியப்பட்டது.
அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த காவல் துறையினா் சந்தேக நபா்களை கண்டறிந்தனா்.
கடந்த டிச.10-ஆம் தேதி ஹிசா் பகுதியில் சோதனை நடத்திய போலீஸாா், சமீா் மற்றும் தேவ் சிங் ஆகிய இருவரைக் கைதுசெய்தனா்.
ஆறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள சமீா், டெபாசிட்டுக்கு தலா ரூ.4,000 என்ற கமிஷனில், வங்கிக் கணக்கு விவரங்களை தேவ் சிங்கிடம் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறிந்து கைதுசெய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் துணை காவல் ஆணையா் பிரசாந்த் கெளதம்.
