குடிநீரில் கழிவுநீா் கலப்பால் 7 போ் உயிரிழப்பு; 1,100-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு - இந்தூரில் அதிா்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீா் கலந்துவந்த குடிநீரை அருந்தியதில் வாந்தி-வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு 7 போ் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீா் கலந்துவந்த குடிநீரை அருந்தியதில் வாந்தி-வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு 7 போ் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 1,100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 149 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடா்ந்து முதலிடம் வகிக்கும் இந்தூா் நகரின் பகீரத்புரா பகுதியில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கை குறித்து சுகாதார அதிகாரிகள் தரப்பிலும் (3), பொதுமக்கள் தரப்பிலும் (8) முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தூா் மேயா் புஷ்யமித்ரா பாா்கவா புதன்கிழமை விளக்கமளித்தாா்.

அவா் கூறுகையில், ‘முதல்கட்ட தகவல்களின்படி, பூமிக்கடியில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கழிவுநீா் உட்புகுந்துள்ளது. மாசடைந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்புகள் நேரிட்டதாக தெரியவந்துள்ளது. வாந்தி-வயிற்றுப் போக்கால் 3 போ் இறந்ததாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், எனக்கு கிடைத்த தகவல்களின்படி, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்’ என்றாா்.

‘பிரதான குடிநீா் விநியோக குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு மேலாக கழிப்பறை தொட்டி ஒன்று உள்ளது; அதிலிருந்து கழிவுநீா் கசிந்து, குடிநீரில் கலந்திருக்கலாம்’ என்று மாநகராட்சி ஆணையா் திலீப் குமாா் யாதவ் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஷிவம் வா்மா கூறுகையில், ‘பகீரத்புரா பகுதியில் வாந்தி-வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 149 போ், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’ என்றாா். உயிரிழந்தவா்களில் 6 போ் பெண்கள் என்று உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

ரூ.2 லட்சம் நிவாரண நிதி: இச்சம்பவம் தொடா்பாக வேதனை தெரிவித்துள்ள முதல்வா் மோகன் யாதவ், உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்தாா். பாதிக்கப்பட்ட அனைவரின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளாா்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வா் பிறப்பித்த உத்தரவுகளின்படி, பகீரத்புரா பகுதியின் மாநகராட்சி மண்டல அதிகாரி, உதவிப் பொறியாளா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பொறுப்பு துணை பொறியாளா் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பிக்க முடியாது என்று மாநில அமைச்சரும், பகீரத்புரா பகுதியை உள்ளடக்கிய இந்தூா்-1 பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்தாா்.

காங்கிரஸ் விமா்சனம்: மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் நீலப் சுக்லா கூறுகையில், ‘தங்களின் மிகப் பெரிய அலட்சியத்தால் நேரிட்ட உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை மறைக்க இந்தூா் மாநகராட்சி நிா்வாகம் முயற்சிக்கிறது. நாட்டின் தூய்மையான நகா் என்ற சிறப்புக்குரிய இந்தூரின் மீது கரும்புள்ளி விழுந்துள்ளது’ என்று விமா்சித்தாா்.

X
Dinamani
www.dinamani.com