இந்திய- சீன எல்லை குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் தவறானவை: ராஜ்நாத் சிங்

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய- சீன எல்லை குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் தவறானவை: ராஜ்நாத் சிங்
Published on
Updated on
1 min read

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(பிப். 3) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'சீனப் படைகள் நமது இந்திய எல்லைக்குள் இருக்கின்றன. சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு ஆக்கிரமித்துள்ளன. இதனை பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார். ஏதோ ஒரு காரணத்திற்காக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதனை பிரதமர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். சீனப் படைகள் இந்திய எல்லையில் இருப்பதாக ராணுவத் தலைமையே கூறியுள்ளது' என்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் கிரண் ரிஜுஜு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில்,

"ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிப். 3 அன்று உரையாற்றும்போது, ராணுவத் தளபதி கூறியதாக இந்திய-சீன எல்லை குறித்த தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்திய - சீனப் படைகள் என இரு தரப்பிலும் உள்ள ரோந்துப் பணிகளில் ஏற்பட்ட இடையூறுகளை மட்டுமே ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். அரசு இந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. ராகுல் காந்தி கூறிய வார்த்தைகளை, ராணுவத் தளபதி ஒருபோதும் கூறவில்லை.

தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதி என்று இருந்தால், அது 1962 மோதலின் விளைவாக அக்சாய் சின்னில் 38,000 சதுர கி.மீ. பகுதி மற்றும் 1963-ல் பாகிஸ்தானால் சீனாவிற்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட 5,180 சதுர கி.மீ. ஆகிய பகுதிகளாகவே இருக்கும்.

வரலாற்றின் தற்போதைய காலகட்டத்தைப் பற்றி ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com