மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி...
தீயை அணைக்கும் வீரர்கள்.
தீயை அணைக்கும் வீரர்கள்.PTI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவின் சத்நாக் கேட் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கூடாரங்களில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை

ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் இரண்டு முறை கும்பமேளா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஜன.19ல் கும்பமேளாவில் 19-வது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின.

ஜன. 25ல் வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனருகில் இருந்த மற்றொரு காரும் தீப்பற்றி எரிந்தது.

இந்த இரு விபத்துகளிலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

30 பேர் பலி

மௌனி அமாவாசையன்று கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் கூடினர். அப்போது திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகினர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com