
ஆந்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நபரை 15 நிமிடங்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரத்தின் பைரம்பள்ளி பகுதியில் வசிக்கும் கௌதமி (24) கல்லூரி படிப்பை முடித்து அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வருகிற ஏப்ரல் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவரை கடந்த சில மாதங்களாக கணேஷ் என்பவர் காதலிப்பதாகக் கூறி அவரைத் துன்புறுத்தி வந்தார். இன்று காலை கௌதமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கணேஷ் அந்தப் பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசிவிட்டு கத்தியால் அவரது தலையில் தாக்கிவிட்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக கௌதமியை மதனப்பள்ளி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர அரசு பெங்களூரில் அவருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இந்த நிலையில், குற்றவாளி கணேஷை சம்பவம் நடைபெற்ற 15 நிமிடங்களில் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநில இளைஞர் நலத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மந்திப்பள்ளி ராம் பிரசாத் ரெட்டி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்த அவர், குற்றவாளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அந்தப் பெண்ணுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவியினையும் அரசு ஏற்கும் என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.