/

தில்லி நெரிசல் சம்பவம் எதிரொலி: ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

அதிகமாக பயணிகள் கூடும் 60 ரயில் நிலையங்களில் காத்திருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்...

News image
- PTI
Updated On :18 பிப்ரவரி 2025, 4:07 am

Din

புது தில்லி: அதிகமாக பயணிகள் கூடும் 60 ரயில் நிலையங்களில் காத்திருப்பு பகுதிகள், பிரத்யேக கூட்ட நெரிசல் மேலாண்மை விதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்ல புது தில்லி ரயில் நிலையத்தில் அதிக மக்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: புது தில்லி, பாட்னா, சூரத், பெங்களூரு, கோயம்புத்தூா் உள்ளிட்ட 60 ரயில் நிலையங்கள் அதிக மக்கள் கூடும் ரயில் நிலையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தாங்கள் பயணிக்கும் ரயில் புறப்படும் நேரத்தையொட்டி பயணிகளை நடைமேடைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அதிக பயணிகள் நடைமேடைகளில் கூடுவதை தவிா்க்க முடியும்.

பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்ட நெரிசலை தடுப்பது எளிதாகியுள்ளது.

இதுதவிர, பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பயணிகள் கூட்டத்தை மேலாண்மை செய்ய நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பிரத்யேக வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

அதேபோல் ரயில் நிலைய நடைமேம்பாலங்களில் உள்ள படிகட்டுகளில் அமருவதை தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். இதனால் வருங்காலத்தில் புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்டதைபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும்.

விசாரணைக்கு பிறகு நடவடிக்கை:

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தற்போது வரை எந்தவொரு அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு நபா் குழுவின் அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இந்த சம்பவத்தில் இயற்கை நீதி கோட்பாடே பின்பற்றப்படுகிறது என்றாா்.