

கருப்பை அகற்றும் அறுவைசிகிச்சையின்போது வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பஞ்சினால், தொற்றுப் பரவி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் பலியான சம்பவத்தில், ஐந்து மருத்துவர்களுக்குத் தொடர்பிருப்பதாக மூத்த மருத்துவ அதிகாரி குற்றம்சாட்டியிருக்கிறார்.
பிலிப்பிட் மூத்த மருத்துவ அதிகாரி அளித்த அறிக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் என ஐந்து பேர் இதற்குக் காரணம் என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில், அரசு மருத்துவமனை மருத்துவரால், கருப்பை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் அவருக்கு வயிற்று வலி குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
தொடர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் பஞ்சு இருந்ததும் அதனால் சீழ் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அகற்ற டிசம்பர் மாதம் இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால், இரண்டாவது அறுவைசிகிச்சையின்போது கீலாவதி மரணமடைந்தார்.
அறுவைசிகிச்சை செய்த போது மருத்துவர்கள் கவனக்குறைவாக, பஞ்சை மறந்து அவரது வயிற்றிலேயே வைத்துத் தைத்ததே இறப்புக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.