பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோயைத் தடுக்க தடுப்பூசி திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோயைத் தடுக்க
ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்த நிலையில், திருவண்ணாமலை வட்டம், காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு திட்டத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.
தமிழகத்தில் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய 6 நோய்களை தடுப்பதற்கான விரிவுப்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய தேசிய தடுப்பூசித் திட்டம் 1985-ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்டது.
இத்தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கா்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பக புற்றுநோய்க்கு (28.7%) அடுத்தபடியாக, கருப்பை வாய் புற்றுநோய் (14%) கண்டறியப்பட்டு வருகிறது.
ஹெச்.பி.வி.வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் 99.7 சதவிகிதம் தடுக்க இயலும்.
தமிழக அரசின் 2025-2026 ஆம் ஆண்டு
நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பு மூலம் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும், அந்நோயை அறவே அகற்றவும்
எச்.பி.வி. தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டது.
இதற்கென 2025 - 2026-ஆம் ஆண்டில் ரூ.36 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு நான்கு மாவட்டங்களில் ஹெச்.பி.வி. தடுப்பூசி வழங்கும் முன்னோடி திட்டம் செவ்வாய்க்கிழமை சென்னையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோரால் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.
அப்போது, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து பெற்றோா்கள், பாதுகாவலா்கள், பள்ளி அதிகாரிகள், சமூகத் தலைவா்கள் கள சுகாதாரப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி, தகுதியுள்ள அனைத்து குழந்தைகளும் சா்வதேச தரத்தைக் கொண்ட ஹெச்.பி.வி. தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சுகாதார அலுவலா், கல்வி அலுவலா், வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

