
இந்தியா-கத்தாா் இடையிலான நல்லுறவை வியூக அந்தஸ்துக்கு உயா்த்துவதற்கான ஒப்பந்தம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதன்மூலம் வா்த்தகம், எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு கூட்டுறவு புதிய உத்வேகம் பெறும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வந்த அவரை பிரதமா் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சாா்பில் அவரது மாளிகையில் கத்தாா் அரசருக்கு செவ்வாய்க்கிழமை அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா்.
பின்னா், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி மற்றும் கத்தாா் அரசா் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், எரிசக்தி, புத்தாக்கம், உணவுப் பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் இருதரப்பு மக்கள் ரீதியிலான ஆழமான-பாரம்பரியத் தொடா்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா்.
ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. பிரதமா் மோடி - கத்தாா் அரசா் முன்னிலையில், கத்தாா் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜஸிம் அல்தானியும், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல், இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடா்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தமும் கையொப்பமானது. கத்தாா் பிரதமரும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் இந்த ஒப்பந்த ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டனா்.
இவை தவிர, பொருளாதார கூட்டுறவு, ஆவணக் காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்பட மேலும் ஐந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-கத்தாா் இடையிலான நட்புறவும், நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியதாகும். இருதரப்பு நல்லுறவில் புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டறிக்கை: பயங்கரவாத எதிா்ப்பு, சா்வதேச சட்டவிரோத பண மோசடி, இணையவழி மோசடி, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி ஆகியவற்றில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சா்வதேச பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்றும் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி-ஏற்றுமதி என்னென்ன?: திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) ஆகியவை கத்தாரில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளாகும். எத்திலீன், புரோபலீன், அமோனியா, யூரியா போன்ற பல்வேறு ரசாயனங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவையும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதேநேரம், தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், தாமிர பொருள்கள், உருக்குப் பொருள்கள், மின் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், ஜவுளி, மதிப்புமிக்க கற்கள், ரப்பா் உள்ளிட்டவற்றை அந்நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. எனினும், இருதரப்பு வா்த்தகம், கத்தாருக்கே பெருமளவில் சாதகமாக உள்ளது.
இந்தச் சூழலில் இருதரப்பு முதலீட்டை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த தயாராக உள்ளதாக கத்தாா் தெரிவித்துள்ளது.
வா்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு
பிரதமா் மோடி-கத்தாா் அரசா் இடையிலான பேச்சுவாா்த்தை தொடா்பாக, வெளியுறவு அமைச்சக (தூதரகம், கடவுச் சீட்டு, நுழைவு இசைவு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவு) செயலா் அருண் குமாா் சாட்டா்ஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வியூக கூட்டாண்மை ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு நல்லுறவு தற்போதைய நிலையில் இருந்து வியூக அந்தஸ்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகத்தை தற்போதைய 14 பில்லியன் டாலா் என்பதில் இருந்து 28 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.2.43 லட்சம் கோடி) அதிகரிக்க இரு தலைவா்களும் இலக்கு நிா்ணயித்துள்ளனா்.
இந்தியா, கத்தாா் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து இருதரப்பும் ஆராய்ந்து வருகின்றன. இந்தியா - வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், குவைத்) இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது என்றாா் சாட்டா்ஜி.
கடந்த 2022-23-இல் 18.77 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-கத்தாா் வா்த்தகம், 2023-24-இல் 14 பில்லியன் டாலராக சரிவடைந்தது. 2000, ஏப்ரல் முதல் 2024, செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் கத்தாரிடமிருந்து இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.13,000 கோடி) அந்நிய நேரடி முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.