
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் எலிவளை சுரங்க தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
இவர்கள்தான் 2023 உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை உயிருடன் மீட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக பாறையைக் குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமையில் இரண்டு நாள்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை நெருங்க முடியவில்லை.
உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு
மீட்புப் பணியை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் திங்கள்கிழமை கூறுகையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவித்துள்ளார்.
”விபத்து நடந்த பகுதிக்கு 50 மீட்டர் தொலைவு வரை சென்றுபார்த்தோம், 9 மீட்டர் விட்டத்தில் 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. அவர்களின் பெயர்களை கூறி கூச்சலிட்டபோதும், அவர்கள் திருப்பி பதிலளிக்கவில்லை.
நூறு டன் எடையுள்ள சுரங்கம் துளையிடும் இயந்திரம், இடிபாடுகள் ஏற்பட்ட பிறகு, நீரின் வேகத்தில் 200 மீட்டர் வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இயந்திரத்தின் கீழ் பகுதியில் தொழிலாளர்கள் சிக்கியிருந்தால் ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் இருக்கின்றது.
தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் ஆக்ஸிஜன் செலுத்தி, நீரை வெளியேற்றி வருகிறோம்” என்றார்.
எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்
கடந்த 2023ஆம் ஆண்டு உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க இடிபாடுகளில் 17 நாள்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மீட்க முடியாத நிலையில், இறுதிகட்டத்தில் எலிவளை சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் களமிறங்கி உயிருடன் மீட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.