புது தில்லி: பாஜக தில்லிக்கு எதுவும் செய்யாமல் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தலின்போது மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூ தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என ஆம் ஆதிமி அறிவித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் இன்று(ஜன. 5) நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “பாஜகவால் தில்லியை உலகத் தரத்திலான தலைநகராக மாற்ற முடியும். இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்காளர்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஆம் ஆத்மி என்றதொரு பேரழிவால் தில்லி பாதிக்கப்பட்டுள்ளது” என்று திலியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், புது தில்லியில் இன்று(ஜன. 5) அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களுடன் பேசுகையில் பாஜகவை விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது: “தில்லி மாநகருக்கு எதுவுமே செய்யாத நிலையில், பாஜக எந்த தைரியத்தில் தில்லி மக்களிடம் வாக்கு கேட்கிறது?
தில்லி நிலம் சீர்த்திருத்தச் சட்டப் பிரிவுகள் 81, 33 முடக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இதனை மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் அரசும், இப்போது ஆம் ஆத்மி அரசும் மத்திய அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
தில்லியில் அடுத்தமுறை வாக்கு சேகரிக்க வரும்போது, தாம் ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கருத்திற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.