பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி?

பாஜக கூட்டணியில் சரத் பவார் அணி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
சரத் பவார், சுப்ரியா சுலே
சரத் பவார், சுப்ரியா சுலே ANI
Published on
Updated on
1 min read

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணியுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்ட சரத் பவார் அணி, 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

முன்னதாகவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும் சின்னமும் அஜித் பவார் அணிக்கே சொந்தம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சரத் பவார் அணியில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பவார் அணியில் விரைவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக கூட்டணியின் ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 300-ஐ கடக்கும்.

மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைய சரத் பவார் தயாராக இருப்பதாகவும், அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கு மோடி அமைச்சரவையில் பதவி பெற முயற்சித்து வருவதாகவும் கட்சிக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபட்னவீஸுக்கு சுப்ரியா சுலே பாராட்டு

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸை பாராட்டினார்.

“மகாயுதி அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. மிகவும் கடினமாக உழைப்பது வேறு யாரும் இல்லை, தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருவர் மட்டும்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

சுப்ரியா சுலே பாராட்டு தெரிவித்து ஒரு வாரத்துக்குள் சரத் பவார் அணி கூட்டணி மாற்றம் குறித்த செய்திகள் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ள நிலையில், சரத் பவார் அணி மாறினால் இந்தியா கூட்டணி மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது.

சரத் பவாருடன் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்க முயற்சித்த பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com