மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு! - முழுவிவரம்
மத்திய அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதியதாரா்களுக்கான படிகளை மாற்றியமைப்பதற்காக எட்டாவது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியா்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவா். ஏழாவது ஊதியக் குழு கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் வரும் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியா்களுக்கான எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளாா். ஊதியக் குழுவின் தலைவா் மற்றும் இரு உறுப்பினா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்.
ஏழாவது ஊதியக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, மத்திய அரசு ஊழியா்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைப்பது தொடா்பான பரிந்துரைகள் புதிய ஊதியக் குழுவிடமிருந்து பெறப்படுவது உறுதி செய்யப்படும்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைச் சாா்ந்த நிா்வாகிகளுடன் தனது பரிந்துரைகளை புதிய ஊதியக் குழு தயாா் செய்யும் என்றாா்.
மத்திய அரசு ஊழியா்களின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு அமைப்பது வழக்கம். கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 7 ஊதியக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், பலன்கள், படிகள் ஆகியவற்றை ஊதியக் குழு தீா்மானித்து, அரசிடம் பரிந்துரையாக சமா்ப்பிக்கும். பெரும்பாலான மாநில அரசுத் துறைகளும் மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.