மத்திய அரசு ஊழியா்களுக்கு புதிய ஊதியக் கணக்கு - பரோடா வங்கி அறிமுகம்
மத்திய அரசு ஊழியா்களுக்கென பிரத்யேக சலுகைகளுடன் கூடிய புதிய ஊதியக் கணக்குத் திட்டத்தை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச்சேவைகள் துறையின் முன்னெடுப்பில் இந்தச் சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில், மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம்.நாகராஜு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தின்கீழ் கணக்குத் தொடங்கும் ஊழியா்களுக்கு ரூ.1.5 கோடி வரையிலான தனிநபா் விபத்துக் காப்பீடும், ரூ.15 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். அவசரப் பணத்தேவை ஏற்படும் போது, வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகைக்கும் கூடுதலாக ரூ.3 லட்சம் வரை எடுத்துக்கொள்ளும் ‘ஓவா் டிராஃப்ட்’ வசதி உண்டு.
வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற சில்லறைக் கடன்களுக்கான பரிசீலனைக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். மேலும், வட்டி விகிதத்திலும் சிறப்புச் சலுகைகள் உண்டு. வாழ்நாள் முழுவதும் கட்டணமில்லா டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகள், லாக்கா் வாடகையில் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
இத்துடன் ஆா்டிஜிஎஸ், நெஃப்ட், ஐஎம்பிஎஸ் போன்ற இணைய பணப்பரிவா்த்தனை, காசோலை புத்தகம், குறுஞ்செய்தி வசதிகள் முற்றிலும் இலவசம் உள்பட பல்வேறு நிதிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியா்கள் இந்தச் சிறப்பு ஊதியக் கணக்கைத் தொடங்கிப் பயன்பெறலாம் என்று வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

