இருவருக்கு மறுவாழ்வு! மூளைச்சாவு அடைந்த பூசாரியின் உறுப்புகள் தானம்!

மூளைச்சாவு அடைந்த பூசாரியின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது பற்றி...
பலிராம் குஷ்வா
பலிராம் குஷ்வா படம் | சிறப்பு ஏற்பாடு(TNIE)
Published on
Updated on
2 min read

மத்திய பிரதேசத்தில் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட கோயில் பூசாரியின் உடல் உறுப்புகள் இருவருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான பலிராம் குஷ்வா (வயது 61) என்ற கோயில் பூசாரி, ஜாபல்பூரில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் ஓட்டக் கூடிய மூன்று சக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் மோதி விபத்து நேரிட்டுள்ளது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பலிராம், ஜாபல்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையாத நிலையில், மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை விதிகள் 2014 இன் கீழ் நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு, பலிராம் மூளைச்சாவு அடைந்ததாக புதன்கிழமை இரவு மருத்துவர்கள் அறிவித்தனர்.

பலிராம் திருமணம் ஆகாதவர் என்பதால், அவரது சகோதரரின் பேரன் ஹரிநாராயணன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னுரிமை அடிப்படையில் போபாலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு நோயாளிகளை காப்பாற்றுவதற்காக பலிராமின் இதயமும் சிறுநீரகமும் விமானத்தில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதேபோல், இந்தூரில் உள்ள நோயாளியை காப்பாற்ற பலிராமின் கல்லீரல் அனுப்ப மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால், முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் பலிராமின் சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, போபாலுக்கு இதயமும், இந்தூருக்கு கல்லீரலும் அனுப்பப்பட்டதாக ஜாபல்பூர் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் சஞ்சய் மிஸ்ரா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விமானத்தில் அனுப்பப்பட்ட உறுப்புகள்

இந்தூர் மற்றும் போபாலில் இருந்து மருத்துவக் குழுவினர் ஜாபல்பூருக்கு வியாழக்கிழமை காலை விரைந்தனர். தொடர்ந்து, மாவட்ட காவல் அதிகாரிகளுடன் இணைந்து பச்சை வழித்தடம் ஏற்படுத்தி, ஜாபல்பூர் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்புகளை விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

முதலில் மருத்துவமனையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஹெலிகாப்டர் வரை சாலை மார்க்கமாக கல்லீரல் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் இந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்து, மருத்துவமனையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள விமான நிலையத்துக்கு சாலை மார்க்கமாக பச்சை வழித்தடம் அமைக்கப்பட்டு இதயம் கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் போபாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது மத்திய இந்தியாவில் நடைபெற்ற முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com