
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியும், தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் இடஒதுக்கீடு, தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரானவா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
கிழக்கு தில்லி பவானாவில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பேரணி, பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நானும் எனது கட்சியும் பிரதமா் நரேந்திர மோடிக்கு பயப்படவில்லை. மாறாக ‘பிரதமா்தான் காங்கிரஸுக்கு பயப்படுகிறாா். தூய்மை நிா்வாகம் குறித்துப் பேசும் கேஜரிவாலின் கண்காணிப்பில்தான், தில்லியில் 'மிகப்பெரிய ஊழல்' நடந்துள்ளது. முந்தைய தோ்தலில் யமுனை நதியை தூய்மைப்படுத்தி அதில் மூழ்கி நீராடுவேன் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா்.
ஆனால், அளித்த வாக்குறுதியை அவர் மீறி விட்டாா். அவா் யமுனை ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முன்வருவாரா? என கேள்வி எழுப்பினார்.
பிரதமா் மோடியும் அரவிந்த் கேஜரிவாலும் இடஒதுக்கீட்டை எதிா்ப்பவா்கள். தலித்துகள், சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவா்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுவேன் என்று கேஜரிவாலால் தெளிவாகக் கூற முடியுமா?. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரானவா் கேஜரிவால் என்பதால் அவா் அவ்வாறு செய்ய மாட்டாா்.
தலைநகரில் கேஜரிவால் ஒரு ஊழல் அரசை நடத்தினாா். மோடி தனது உரைகளில் பொய்யை மட்டுமே சொல்கிறாா். அவரையே கேஜரிவாலும் பின்பற்றுகிறாா்.
தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை உடைப்போம்.
காங்கிரஸ் ஒரு சித்தாந்தத்தைக் கொண்ட கட்சி. அது பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது. மோடியின் வெறுப்புச் சந்தையில் அன்பைப் பரப்ப நாம் கடைகளைத் திறக்க வேண்டும் என்றாா் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.