மக்களவையில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு மற்றும் மகா கும்பமேளாவில் அண்மையில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். பின்னா், மக்களவை அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியது. அப்போது, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீா்மானம் ஏற்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார மாற்றத்தைத் தூண்டிய தாராளமயமாக்கல் கொள்கையில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகூா்ந்து, ஓம் பிா்லா பேசினாா்.
நாட்டில் பொருளாதார சீா்திருத்தங்களைக் கட்டமைத்தவா் என்ற பெருமைக்குரிய மன்மோகன் சிங், 6 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவா். தனது 92 வயதில், கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி தில்லியில் காலமானாா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கடந்த 29-ஆம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்தனா். இவா்களுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபா் ஜிம்மி காா்ட்டா் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஹசன் கான், எம்.ஜகந்நாத், பி.ஆா்.சுந்தரம் உள்ளிட்டோருக்கும் மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பிறகு மக்களவை சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.