பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளது.
 JP Nadda
ஜெ.பி. நட்டா..
Published on
Updated on
1 min read

நமது சிறப்பு நிருபர்

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டாவுக்கு மீண்டும் தலைவராகத் தொடருவதற்கான வாய்ப்பை வழங்குவதா? அல்லது புதிய தலைவரை நியமிப்பதா? என்பது குறித்து அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கவுள்ளது. இந்த விவகாரத்தில் இம்மாத இறுதிக்குள்ளாக பாஜக தலைமை முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாஜகவின் அமைப்பு ரீதியாக உள்ள 37 மாநிலங்களில் உள்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன. அவை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பாஜக மேலிட வட்டாரங்களில் விசாரித்தபோது, "கட்சி சட்டவிதிகளின்படி தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்குவதற்கு முன்பு, 37 அமைப்பு ரீதியிலான மாநிலங்களில் குறைந்தபட்சம் 19 மாநிலங்களிலாவது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஜூலை 1-ஆம் தேதிக்குள்ளாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறித்த காலத்துக்கும் மேலாக இப்பணிகள் நீடிப்பதால் தேர்வு நடைமுறையில் சில தளர்வுகளைக் கடைப்பிடிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது' என்றன.

பாஜக விதிகளின்படி கட்சியின் பாதி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட பிறகு மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், குறைந்தபட்சம் பாதி மாநிலங்களிலாவது மாநிலத்தலைமை தேர்வு அல்லது நியமனங்கள் நடந்தால்தான் அகில இந்திய தலைவரைத் தேர்வு செய்ய முடியும்.

ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக 2023 ஜனவரியில் முடிவடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக் காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் புதிய தலைமை தேர்வாகும் வரை அவரே பதவியில் நீடித்து வருகிறார்.

"இத்தகைய சூழலில், கட்சிக்கும் ஆட்சிக்கும் இணைப்புப் பாலமாக விளங்கும் ஜெ.பி. நட்டாவுக்கே மறுவாய்ப்பு வழங்குவது குறித்து பாஜக மேலிடம் ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக விரைவில் பாஜகவின் ஆட்சிமன்றக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

அதில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் போனால் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் கிடைப்பார்' என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com