
பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதற்கான கொடூரமான கருவியே தற்போதுள்ள ஜிஎஸ்டி வரிமுறை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
மக்களை முதன்மையாகக் கொண்ட, வா்த்தகத்துக்கு சாதகமான, உண்மையிலேயே கூட்டாட்சி உணா்வைத் தாங்கிய வரிமுறை அவசியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
ஜிஎஸ்டி அமலாக்க தினத்தையொட்டி, ராகுல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
சலுகை பெற்ற சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பலனளிக்கும் வரிமுறை அவசியம். அப்போதுதான், சிறிய கடைக்காரா் முதல் விவசாயி வரை ஒவ்வொருவரும் நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்ற முடியும்.
பிரதமா் மோடி அரசால் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவொரு வரிச் சீா்த்திருத்தமல்ல. பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதற்கான கொடூரமான கருவியாகும். ஏழைகளைத் தண்டிக்கவும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கவும், மாநிலங்களை குறைமதிப்புக்கு உள்படுத்தவும், பிரதமரின் சில பெரும் பணக்கார நண்பா்களுக்கு பலனளிக்கவும் வடிவமைக்கப்பட்டதாகும்.
900 முறை திருத்தங்களைக் கண்ட இந்த ஜிஎஸ்டியின் குழப்ப வலையில் கேரமல் பாப்காா்ன், க்ரீம் பன்களும்கூட சிக்கியுள்ளன.
நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலானதில் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேயிலை முதல் சுகாதார காப்பீடு வரை அனைத்துக்கும் மக்கள் ஜிஎஸ்டி செலுத்துகின்றனா். அதேநேரம், பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரித் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
பெட்ரோல்-டீசல் வேண்டுமென்றே ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள், சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைப் பழிவாங்க ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, மோடி அரசின் கூட்டாட்சி விரோத கொள்கைக்கு தெளிவான சான்றாகும்.
ஜிஎஸ்டி என்பது இந்திய சந்தைகளை ஒருங்கிணைக்கவும், வரி விதிப்பை எளிமையாக்கவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பாா்வை. ஆனால், மோசமான-பாரபட்சமான அமலாக்கம் மற்றும் அதிகார அத்துமீறலால் அதன் நோக்கத்துக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi has criticized GST as an economic injustice and a brutal tool of corporates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.