
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பான விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவா் உறுதியளித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடா்பாக, கோயில் காவலாளி அஜித்குமாரை (29) மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் தனிப் படை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது போலீஸாா் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பேசினாா். இதைத் தொடா்ந்து, அவா் முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா். அதன் விவரம்:
திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாா், மா்மமான முறையில் மரணம் அடைந்தாா். விசாரணையின்போது காவலா்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தேன்.
இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.
இந்த சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 காவலா்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, 5 காவலா்கள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். டிஎஸ்பியும் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இப்படி சட்டபூா்வமான நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
சிபிஐ விசாரணை: அஜித்குமாரின் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, வழக்கில் நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் உறுதியளித்தேன்.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனத் தெரிவித்தது. ஆனாலும், இந்த சம்பவத்தில் காவல் துறையைச் சோ்ந்த ஐந்து போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான சந்தேகமும் எழுப்பப்படக் கூடாது. இதைக் கருத்தில்கொண்டு வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
இனி எந்தக் காலத்திலும் நடக்கக் கூடாது: முதல்வா்
காவல் நிலைய மரணங்கள் போன்ற சம்பவங்கள் இனி எந்தக் காலத்திலும் நடக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: காவல் துறையினா் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். திருப்புவனம் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.
அங்கு சில காவலா்கள் செய்த செயல் மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.
தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என நம்பி காவல் துறையை நாடிவரும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் காவல் துறை எப்போதும் செயல்பட வேண்டும் என்று முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
5 காவலர்கள் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. இடைநீக்கம், காத்திருப்பு பட்டியலில் எஸ்.பி.
மானாமதுரை/சென்னை, ஜூலை1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், தனிப்படை காவலர்கள் 5 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் தனிப் படை காவலர்கள் அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை.
விசாரணையின்போது, அஜித்குமாரை காவலர்கள் கடுமையாகத் தாக்கியதில் கடந்த சனிக்கிழமை அவர் உயிரிழந்தார். அஜித்குமாரின் உடல்கூறு அறிக்கையில் அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 காவலர்களில் ராமச்சந்திரனைத் தவிர, மற்ற 5 காவலர்கள் மீதும் திருப்புவனம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு ஆகிய 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை நீதித் துறை நடுவர் வெங்கடேஷ் பிரசாத் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிஎஸ்பி பணியிடை நீக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார். சண்முகசுந்தரம் கடந்த மாதம்தான் மானாமதுரை டிஎஸ்பியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பு பட்டியலில் எஸ்.பி.: சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.