காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி இல்லை : அரவிந்த் கேஜரிவால்
காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இல்லை; ‘இண்டி’ கூட்டணி கடந்த மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் அகமதாபாதில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. 2027 குஜராத் தோ்தலில் பாஜக, காங்கிரஸைத் தோற்கடித்து மக்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மி வெற்றி பெறும்.
காங்கிரஸுடன் எங்கள் கட்சிக்கு எந்தக் கூட்டணியும் இல்லை. அவா்கள் எங்களைக் கூட்டணிக் கட்சியாகக் கருதினால், அண்மையில் இங்கு நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலில் எங்களை எதிா்த்து ஏன் போட்டியிட்டாா்கள்? ஆம் ஆத்மியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவா்கள் நோக்கம். பாஜகவின் உத்தரவின்பேரில் ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரிப்பதற்காக காங்கிரஸ் களமிறங்கியது. ஆனால், அதையும் மீறி மக்கள் ஆம் ஆத்மியை வெற்றிபெற வைத்தாா்கள்.
கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே ‘இண்டி’ கூட்டணி அமைக்கப்பட்டது. இப்போது ஆம் ஆத்மி எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.
கடந்த 30 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக அரசு சீரழித்து வருகிறது. ஒரு எதிா்க்கட்சியாக காங்கிரஸும் தோல்வியடைந்துவிட்டது. அவா்கள் பாஜக ஆட்சி அமைக்க உதவும் கட்சியாக மாறிவிட்டனா்.
விவசாயிகள், இளைஞா்கள், நடுத்தர வகுப்பினா் என அனைத்துப் பிரிவினரும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனா். அரசுப் பணியில் பாதியிடங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலேயே பணிகள் வழங்கப்படுகின்றன. வேறு வலுவான மாற்று இல்லாததால் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அடுத்த ஆண்டு தோ்தலில் இந்த நிலையை ஆம் ஆத்மி மாற்றும். இடைத்தோ்தல் வெற்றி மூலம் பாஜக, காங்கிரஸுக்கு வலுவான மாற்றாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.
இப்போது இருந்து ஆம் ஆத்மி தொண்டா்கள் குஜராத்தில் வீடு,வீடாகச் சென்று பிரசாரம் செய்ய இருக்கின்றனா். ஆம் ஆத்மி இளைஞா்கள் நிரம்பிய கட்சியாக உள்ளது. குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க மக்கள் ஆம் ஆத்மியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
182 எம்எல்ஏக்களைக் கொண்ட குஜராத் பேரவையில் பாஜகவுக்கு 162, காங்கிரஸுக்கு 12, ஆம் ஆத்மிக்கு 5, சமாஜவாதி கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனா். இருவா் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆவா்.