
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜூலை 29-ல் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா போன்ற 8 மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மழைக்கால கூட்டத்தொடரில் முதன்மையாக பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு, ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், அவையைப் புறக்கணித்து தொடர்ந்து அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, இரண்டாவது வாரத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணிநேரம் விவாதிக்க நாடாளுமன்றத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, தற்போது லண்டனுக்கு அரசுமுறைப் பயண்மாகச் சென்றுள்ளதால், இந்தப் பயணம் முடிந்த பிறகு இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்தப் பயணத்தில் பல வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாட்டின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் தளவாடங்களைக் குறிவைத்து மே 7ஆம் தேதி தாக்குதல் நடத்தின.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அவ்வாறு கூறுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட பிறகும், டிரம்ப் இதனைத் தொடர்ந்து கூறி வருகிறார்.
டிரம்ப்பின் இத்தகைய செயலுக்கு பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? எனவும் இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிக்க | அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.