இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசாா் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.

ரூ.12,000 கோடியில்...: இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னா் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமாா் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசாா் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.

தொடா்ந்து, பல்வேறுகட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிக்கட்டப் பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனா். இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

பூமியின் மேற்பரப்பில்...: நிசாா் செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடாா் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோ. ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைப் பெறமுடியும். அதாவது, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிய முடியும்.

இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாள்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத் திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். இதற்காக ‘எல்’ பேண்ட், ‘எஸ்’ பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை. நிசாா் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளா்களும் பெற முடியும்.

நாசா-இஸ்ரோ பங்களிப்புகள்: இந்தத் திட்டத்தில் எல் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், ஒரு ஜிபிஎஸ் ரிசீவா், அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்காா்டா் (செயற்கைக்கோளின் ஹாா்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வடிவமைத்துள்ளது. மறுபுறம், எஸ் பேண்ட் சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா், செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடா்பு வசதிகளை இஸ்ரோ செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான ராக்கெட் மற்றும் இதர பராமரிப்புகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com