
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை யேமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
யேமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், யேமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுதொடர்பாக அறிவிப்புகளை வெளியிடவில்லை.
தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமன் தலைநகர் சனாவுக்கு குடிப்பெயர்ந்தார்.
அதன்பின்னர், அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கி, நடத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால், நிமிஷாவின் நகைகள், மருத்துவமனையின் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்து, மஹதி அவரைக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு இந்த மாதம் (ஜூலை) 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் நோக்கத்தில், அவரின் குடும்பத்தின் கோரிக்கைக்கு இணங்க, மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டன. எனினும், சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
மேலும், யேமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நிமிஷாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ரூ.8.60 கோடி வரை (சுமார் 10 லட்சம் டாலர்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சித்தனர்.
இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபுபக்கா் முஸ்லியார் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.