
மேகாலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கனமழையில் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மேகாலயத்தில் வழக்கமாக நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் கனமழை பெய்வது வழக்கம்தான். ஆனால், இந்த உண்மையை, 4,000 டன் நிலக்கரி காணாமல் போன வழக்குக்கு பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார் மாநில அமைச்சர். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் பொறுப்பின்றி செயல்படுவதாக அரசை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
4,000 டன் நிலக்கரி எங்கே போனது என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில அமைச்சர் அளித்த பதில் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதாவது, மாநிலத்தில் பெய்த கனமழையால் நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதே அந்த பதில்.
மேகாலய மாநிலம், ரஜாஜு மற்றும் தியொஞ்கன் கிராமங்களிலிருந்து காணாமல் போன நிலக்கரியை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகாலயத்தின் கலால் துறை அமைச்சர் கைர்மென் ஷைல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகாலயத்துக்கு அதிகப்படியான மழை கிடைத்துள்ளது. உங்களுக்குத் தெரியாது.. மழை காரணமாக நிலக்கரி அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. அதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் நிலக்கரி காணாமல் போனதை நியாயப்படுத்த விரும்பவில்லை. மழையில்தான் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் என்பதற்கும் போதுமான ஆதாரம் இல்லை என்பதால், எந்தவிதமான இறுதி முடிவுக்கும் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2014ஆம் ஆண்டு முதல் மேகாலயத்தில், நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி போக்குவரத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை வித்திருந்தது. நிலத்தடி நீர் வீணாவது, சுரங்கப் பணிகளில் அவ்வப்போது விபத்து போன்றவை நேரிடுவதன் காரணமாக, நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக நிலக்கரி கடத்துவது போன்றவற்றின்போது பிடிபடும் நிலக்கரிகள் பல்வேறு இடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4,000 டன் நிலக்கரி காணாமல் போனதாகப் புகார் எழுந்தது.
மேலும், மேகாலயத்தில் நடைபெறும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கப் பணிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதிலளிக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளை பல்வேறு துறையினர் இணைந்து கண்காணிப்பதாகவும் அவர் கூறினார்.
மக்கள் தங்கள் பிழைப்புக்காகத்தான் இப்படி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்றபடி யாரும் மாநிலத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் நடக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.