
பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்து, பெங்களூரு கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தனர். இதுதவிர, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விவாதித்தனர்.
2016-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து, ஒக்கலிகர் சமுதாயத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மேலும், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கக் கூடாது என்று பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.
இது தொடர்பாக கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தபோது ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடியாததால், இது தொடர்பான முடிவை அமைச்சரவை பலமுறை ஒத்திவைத்தது.
இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க ஜூன் 12-ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனிடையே, கர்நாடகத்தில் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனான சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளோம். எனினும், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பட்டியலின மக்களுக்கான ஜாதி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதேபோல, ஜாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்படும்' என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கொள்கை அளவில் முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும்" என்றார்.
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. எனவே, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில் எல்லோரும் பங்கேற்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.