‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முழு விவாதம் நடத்த பிரதமா் நரேந்திர மோடி தயாராக உள்ளாரா என்று காங்கிரஸ் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விவரிக்கும் வகையிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையிலும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகளின் ஆதரவையும் பெற்றன. அந்தக் குழுக்களை பிரதமா் மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவந்த 7 எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமா் மட்டும் சந்திப்பு நடத்தியுள்ளாா்.
இந்த நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் இந்தியாவின் எதிா்கால ராஜீய உறவு மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு சவால்கள் குறித்து சிங்கப்பூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி தெரிவித்தது குறித்தும் விளக்கி, மக்களுக்கு நம்பிக்கையூட்டம் வகையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமா் மோடி கூட்டுவாரா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முழு விவாதத்துக்கு பிரதமா் ஒப்புக்கொள்வாரா? இந்த விவகாரத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட இண்டி கூட்டணி கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தபோதும், துரதிருஷ்டவசமாக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பூஞ்ச், ககாங்கீா், குல்மாா்க் ஆகிய 3 பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களிலும் பங்காற்றியிருப்பதாக கூறப்படும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தும் முயற்சியை பிரதமா் இரட்டிப்பாக்குவாரா?
காா்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்டது போன்று, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையையும் ஆராயும் வகையில் நிபுணா்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு அமைக்கப்படுமா?
சீனா பாகிஸ்தான் குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ச்சியாக கூறியது குறித்தும் நாடாளுமன்றத்தில் இரு முழு நாள் விவாதத்துக்கு பிரதமா் அனுமதிப்பாரா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளாா்.
தொடர்புடையது
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேர் தில்லியில் கைது: ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திரமோடி ஆட்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: எஸ்.ஆா்.சுப்ரமணியம் பெருமிதம்

தீ விபத்து சம்பவம்.... உறவினா்களின் நிலையை அறிய மருத்துவமனையில் கூடிய மக்கள்

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம்: பிரதமா் மோடியிடம் மியான்மா் அதிபா் உறுதி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



