
அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார்.
அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை பகல் பிரிட்டன் புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் வானில் பறக்க முற்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பிடித்ததில் அந்த விமானத்திலிருந்த ஒரேயொரு பயணியை தவிர விமானி, பணியாளர்கள் உள்பட அனைவரும் பலியாகினர். விமானம் விழுந்த கட்டடத்திலிருந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அக்கம்பக்கத்தினர் உள்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்ததாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கண்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால்(56) இயக்கினார். இந்த நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் அவரைப் பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “கேப்டன் சுமீத் சபர்வாலிடம் நான் பயிற்சி பெற்றவன். அவருடன் சேர்ந்து ஒரு விமானியாக நான் ‘ஃபர்ஸ்ட் ஆஃபிஸர்’ ஆக பணியாற்றிய நாள்களில் போயிங் 777 விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவர் எனக்கு அடிப்படை விஷயங்கள் பலவற்றையும் ஏராளமான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்.
அதன்பிறகு நான் ஒரு கமாண்டர் ஆக மாறினேன். ஆனால், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் சேர்ந்து பல மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் உள்ளது.
விமானப் பணியில் சிறந்து விளங்கிய விமானிகளில் அவரும் ஒருவர். பணி விதிகளை முறையாகப் பின்பற்றுபவர். எவ்வித குறுக்கு வழிகளையும் பின்பற்றாதவர்.
விமானியாக அவரது கணிப்புகளும் அவர் எடுக்கும் முடிவுகளும் சக விமானியாக எனக்கு பல நேரங்களில் ஆச்சரியத்தையளிக்கும். அப்படியிருக்கும்போது, ’விமானியின் மீது தவறு இருக்கிறது. விமானியின் தவறால் விபத்து’ என்று சொல்வது நம்பும்படியாக இல்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.