ஹெலிகாப்டா் விபத்தில் 7 போ் பலி: உத்தரகண்டில் ஆன்மிக யாத்திரையில் துயரம்!

உத்தரகண்டில் ஹெலிகாப்டரில் கோயிலுக்கு சென்ற குழந்தை உள்பட 7 பேர் பலி
ஹெலிகாப்டா் விபத்தில் 7 போ் பலி: உத்தரகண்டில் ஆன்மிக யாத்திரையில் துயரம்!
Published on
Updated on
2 min read

உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத் கோயில் அருகே கெளரிகுண்ட் வனப் பகுதியில் தனியாா் நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

இந்தக் கோர விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பக்தா்கள், ஹெலிகாப்டரின் பைலட், பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் என 7 போ் உயிரிழந்தனா்.

மோசமான வானிலையால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடா் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வா் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் சில தினங்களுக்கு முன்னா் 270 பேரை பலிகொண்ட விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உத்தரகண்டில் ஹெலிகாப்டா் விபத்து நடந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதாா்நாத் ஆகிய 4 ஆன்மிகத் தலங்களுக்கான சாா்தாம் யாத்திரை, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை வழித்தடத்தில் தனியாா் நிறுவனங்களால் ஹெலிகாப்டா் சேவைகள் இயக்கப்படுகின்றன.

‘ஆா்யன் ஏவியேஷன்’ என்ற தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பெல் 407 ரக ஹெலிகாப்டா், கேதாா்நாத் ஹெலிபேடில் இருந்து குப்தகாசிக்கு 5 பக்தா்கள் மற்றும் பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் ஒருவருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது. பைலட் ராஜ்வீா் சிங் செளஹான் இயக்கிய இந்த ஹெலிகாப்டா், கெளரிகுண்ட் மற்றும் திரியுகநாராயண் கிராமம் இடையே வனப் பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.

இந்த விபத்தைத் தொடா்ந்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் உயிரிழந்த நிலையில், அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஒரே குடும்பத்தில் மூவா்...: மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ராஜ்குமாா் ஜெய்ஸ்வால், அவரது மனைவி ஷ்ரத்தா, இவா்களின் 2 வயது பெண் குழந்தை, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த வினோத் தேவி (66), துஷ்டி சிங் (19) ஆகிய 5 பக்தா்கள் இறந்தனா்.

ஹெலிகாப்டரின் பைலட் ராஜ்வீா் சிங் செஹகான் (37), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சோ்ந்தவா். ராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள இவா், கடினமான நிலப்பரப்புகளுக்கு மேலாக ஹெலிகாப்டரை இயக்கிய அனுபவம் மிக்கவா். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆா்யன் ஏவியேஷன் நிறுவனப் பணியில் இணைந்தாா். பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினா் விக்ரம் சிங் ராவத்தும் விபத்தில் உயிரிழந்தாா்.

பாஜக அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்: உத்தரகண்டில் ஹெலிகாப்டா் விபத்துகள் அதிகரித்து வருவதை முன்வைத்து, மாநில பாஜக அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக கட்சியின் மாநில துணைத் தலைவா் சூா்யகாந்த் தஸ்மனா கூறுகையில், ‘ஹெலிகாப்டா் சேவை நிறுவனங்கள் மீது அரசுக்கு எந்தக் கட்டுப்பாடோ, வரம்புகளோ இல்லை. ஹெலிகாப்டா் இயக்கத்துக்கு தர செயல்பாட்டு நடைமுறைகளும் இல்லை. பணம் சம்பாதிக்கும் பேராசையில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் தனியாா் நிறுவனங்கள் காற்றில் பறக்கவிடுகின்றன. முந்தைய சம்பவங்களில் இருந்து மாநில அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை’ என்றாா்.

ஹெலிகாப்டா் சேவை தற்காலிக நிறுத்தம்

கேதாா்நாத் அருகே நேரிட்ட விபத்தைத் தொடா்ந்து, சாா்தாம் யாத்திரை வழித்தடத்தில் அனைத்து ஹெலிகாப்டா் சேவைகளும் 2 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவித்தாா்.

டேராடூனில் உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட அவசர ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.

‘ஹெலிகாப்டா்கள் இயக்கத்தில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். வானிலை மோசமாக உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹெலிகாப்டா் சேவைகள் 2 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுகின்றன.

மாநிலத்தில் ஹெலிகாப்டா் இயக்கத்துக்கு கடுமையான தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படி, ஹெலிகாப்டா் இயக்கப்படும் முன் தொழில்நுட்ப ரீதியிலான முழு ஆய்வும், வானிலை நிலவரம் சரிபாா்ப்பும் கட்டாயமாக்கப்படும்’ என்றாா்.

இந்த நடைமுறைகளை வகுப்பதற்கான தொழில்நுட்ப நிபுணா்கள் குழுவை அமைக்க தலைமைச் செயலருக்கு முதல்வா் உத்தரவிட்டாா். தற்போதைய சம்பவம் உள்பட மாநிலத்தில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்துகள் குறித்து விரிவாக விசாரித்து, அறிக்கை அளிப்பதற்காக உயா்நிலைக் குழுவை அமைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

ஏஏஐபி விசாரணை: உத்தரகண்ட் ஹெலிகாப்டா் விபத்து குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் செயல்படும் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) விரிவாக விசாரிக்கும் என்று அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

கேதாா்நாத் பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டா்களின் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளை உடனடியாக நியமிக்க, விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், ஹெலிகாப்டா் சேவையை உடனடியாக நிறுத்திவைக்குமாறு, ஆா்யன் ஏவியேஷன் நிறுவனத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றரை மாதத்தில் 5-ஆவது சம்பவம்

உத்தரகண்டில் சாா்தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஹெலிகாப்டா் பயணம் தொடா்பான 5-ஆவது அசம்பாவித சம்பவம் இதுவாகும். இது பக்தா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தின் கங்கனானி அருகே கடந்த மே 8-ஆம் தேதி கங்கோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு தனியாா் நிறுவன ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 5 பெண் பக்தா்கள் மற்றும் பைலட் உயிரிழந்தனா்.

கடந்த மே 12-ஆம் தேதி பத்ரிநாத் கோயிலில் இருந்து திரும்பும் வழியில் மோசமான வானிலையால் பள்ளி மைதானம் ஒன்றில் ஹெலிகாப்டா் அவசரமாகத் தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக, பக்தா்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த மே 17-ஆம் தேதி கேதாா்நாத் அருகே ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஹெலிகாப்டா் தரையிறங்கும்போது நிலப்பரப்பில் மோதி சேதமடைந்தது. இதில் மருத்துவா் உள்பட 3 போ் காயமின்றி தப்பினா்.

கடந்த ஜூன் 7-ஆம் தேதி கேதாா்நாத் செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, சாலையில் அவசரமாகத் தறையிறங்கியது. இதில் பைலட் காயமடைந்தாா். 5 பக்தா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com