காங்கிரஸ் ஆட்சியில் நாளும் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா

ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவை, தில்லி என பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல்கள் நடந்தன.
யோகி ஆதித்யநாத் உடன் அமித் ஷா
யோகி ஆதித்யநாத் உடன் அமித் ஷாPTI
Published on
Updated on
2 min read

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவை, தில்லி என பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிதாக தேர்வாகியுள்ள 60 ஆயிரம் காவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை வழங்கும் அமித் ஷா
பணி நியமன ஆணைகளை வழங்கும் அமித் ஷாPTI

இந்த நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதித்தன்மை குறித்தும் அமித் ஷா பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

''எனக்கு முன்பு அமர்ந்துள்ள இளைஞர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள். எந்தவித பரிந்துரைகளுமின்றி பல்வேறு சாதி, மதம் மற்றும் மாவட்டங்களில் இருந்து 60 ஆயிரம் பேர் காவல் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய போலீஸ் படையில் அவர்களும் பங்கெடுக்கவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அகமதாபாத், ஜெய்ப்பூர், கோவை, தில்லி மற்றும் காஷ்மீர் என பல பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், இந்தியாவின் மீது மூன்று முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உரி பகுதியில் தாக்குதல் நடத்தியபோது சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வழித் தாக்குதலை பயங்கரவாதிகள் சந்தித்தனர். தற்போது, பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்தார். அதாவது, இந்தியர்களின் ரத்தம் வீணாக சிந்தவைக்கக் கூடியதல்ல; அவ்வாறு செய்பவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்திப்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

நக்சல் வன்முறை குறைப்பு

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நக்சல்களின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன. 2026 மார்ச் 31க்குள் நக்சல் இயங்கங்கள் முற்றிலும் முடக்கப்படும். 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சல்களின் செயல்பாடுகள், மோடி தலைமையிலான 11 ஆண்டுகள் ஆட்சியில் பெரிதும் குறைந்துள்ளது. தற்போது 3 மாவட்டங்களில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன'' எனக் குறிப்பிட்டார்.

அரசுத் தரவுகளின்படி 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் நக்சல் வன்முறைகள் 53% குறைக்கப்பட்டுள்ளன. இதேகாலகட்டத்தில் நக்சல் இயக்கத்திலிருந்து 7,744 பேர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com