
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் மூடப்பட்ட 16 பூங்காக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
முதல்நாளிலேயே பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பூங்காக்களின் சுற்றுப்புற இடங்களில் ஏராளமான பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாத் துறையை நம்பியுள்ள அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பைப் பலப்படுத்தி, சுற்றுலாவை மீட்டெடுக்கும் முயற்சிகளை மத்திய, யூனியன் பிரதேச அரசுகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில், பஹல்காமில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, பக்ரீத் பண்டிகையைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் உள்ளூா் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது.
பயங்கரவாதத் தாக்குதலால் மூடப்பட்ட பஹல்காமில் உள்ள பீட்டாப் பள்ளத்தாக்கு உள்பட சில பூங்காக்கள், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வெரினாக், கோகா்நாக் மற்றும் அச்சாபல் பூங்காக்கள், பாதாம்வாரி பூங்கா, நிகீனுக்கு அருகேயுள்ள ‘டக்’ பூங்கா, ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பால் அருகேயுள்ள தக்தீா் பூங்கா ஆகியவை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இதேபோன்று, ஜம்மு பிராந்தியத்தின் கதுவாவில் சா்தால் மற்றும் தாகா், தேவிபிண்டி, ரியாசியில் சியாத் பாபா மற்றும் சுலா பூங்கா, தோடாவில் குல்தண்டா மற்றும் ஜெய் பள்ளத்தாக்கு, உதம்பூரில் பஞ்சேரி உள்ளிட்ட 8 பூங்காக்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.