
மேகாலயத்தில நடந்த தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் பின்னணியாக இருக்கும் என்று காவல்துறை கருதுவில்லை, பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் தெரிவித்துள்ளார்.
மேகாலயத்துக்கு தேனிலவு சென்றிருந்தபோது, ராஜா ரகுவன்ஷி மே 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவரது மனைவி சோனம், காதலர் ராஜ், கூலிப் படையைச் சேர்ந்த மூன்று பேர் ஜூன் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் கூறுகையில், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், ராஜா ரகுவன்ஷி கொலைக்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றவாளிகள் தரப்பில் கூறப்படும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என்ற கோணத்தில்தான் விசாரித்து வருகிறோம் என்றார்.
மேலும், திருமணமாகி ஒரு சில நாள்களுக்குள்ளேயே, ஒருவரைக் கொலை செய்துவிடும் அளவுக்கு வன்மம் அதிகரித்தது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், முக்கோணக் காதல்தான் கொலைக்குக் காரணமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், அது ஒன்றுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் இடாஷிஷோ கூறியிருக்கிறார்.
விசாரணை சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. வலுவான ஆதாரங்களோடு, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?
எந்தவொரு சந்தேகமும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிரான வலிமையான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றார்.
தேனிலவு கொலை என பெயர் வந்தது ஏன்?
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24), தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) கடந்த மே 11-ஆம் தேதி இந்தூரில் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்னா், தேனிலவு கொண்டாட புதுமண தம்பதி மேகாலயத்துக்குச் சென்ற நிலையில், ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதால், இந்தக் கொலையை தேனிலவு கொலை என்று அழைக்கிறார்கள்.
மேகாலயத்தில் மே 23ஆம் தேதி இருவரும் மாயமானதாக காவல்துறையினர் தேடிய நிலையில், ஒரு அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் ஜூன் 2-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், சோனம் கிடைக்கவில்லை.
திடீர் திருப்பமாக, ராஜாவின் உடல்கூறாய்வில் தலையில் கூா்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததால், அவா் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில்தான், உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் காவல் துறையிடம், கணவரைக் கொலை செய்ததாக, சோனம் சரணடைந்தாா். திருமணத்துக்கு முன்பே, ராஜ் குஷ்வாஹாவை காதலித்ததால், கணவரை தேனிலவுக்கு அழைத்துச் சென்று, கூலிப்படையினா் மூலம் சோனம் கொலை செய்தது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.