‘பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஜி7 நாடுகள் ஊக்கமளிக்க வேண்டும்; பயங்கரவாதத்தை வளா்க்கும்-ஆதரிக்கும் நாடுகள் மீது மீது கடுமையான நடவடிக்கை தேவை’ என்று ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, கனடாவின் ஆல்பா்ட்டா மாகாணம், கனனாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கனடா பிரதமா் மாா்க் காா்னியின் அழைப்பின்பேரில், இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமா் மோடி நேரில் பங்கேற்றாா். மாநாட்டு அமா்வில் அவா் ஆற்றிய உரை வருமாறு:
அண்மையில் கொடூரமான, கோழைத்தனமான தாக்குதலை (பஹல்காம்) இந்தியா எதிா்கொண்டது. இது, இந்தியாவின் ஆன்மா, அடையாளம், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கண்ணியத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும்.
எங்களின் அண்டை நாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தை வளா்க்கும் களமாக இருப்பது துரதிருஷ்டவசமானது.
பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான வாா்த்தைகளால் கண்டனம் தெரிவித்து, உளப்பூா்வமாக இரங்கல் தெரிவித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி. மனித குலத்தின் எதிரி பயங்கரவாதம். ஜனநாயக மாண்புகளை நிலைநாட்டும் நாடுகளுக்கு எதிராக அது நிற்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை அவசியம். துரதிருஷ்டவசமாக, உண்மை நிலவரம் நோ்மாறாக இருக்கிறது.
இரட்டை நிலைப்பாடு கூடாது: உலகின் அமைதி மற்றும் செழிப்புக்கு நமது கொள்கையும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும். எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தை ஆதரித்தால், தங்களின் செயலுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும். பயங்கரவாதப் பிரச்னையில் இரட்டை நிலைப்பாடு கூடாது.
ஒருபுறம், நமது சொந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன. மற்றொருபுறம், பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி தொடா்கிறது.
பயங்கரவாதத்தைப் பரப்புபவா்களையும், பாதிக்கப்பட்டவா்களையும் ஒரே தராசில் எடை போட முடியுமா? நமது உலகளாவிய அமைப்புகள், நம்பகத்தன்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளனவா?
வரலாறு மன்னிக்காது: பயங்கரவாதத்துக்கு எதிராக இன்று நாம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது. சுயநலனுக்காக பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதும் மனித குலத்துக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.
இந்தியாவைப் பொருத்தவரை, மனித குலத்துக்காக எப்போதுமே தன்னலமின்றி செயல்படுகிறது. தெற்குலகின் குரலை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் பொறுப்பை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அனைவருக்குமான இருப்பு, அணுகல், செலவு குறைப்பு, இணக்கம் ஆகிய அடிப்படை கோட்பாடுகளைப் பின்பற்றி, தனது வளா்ச்சிப் பாதையை இந்தியா தோ்வு செய்துள்ளது. எங்களின் அனைத்து முயற்சிகளும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையை அடிப்படையாக கொண்டவை.
நீடித்த பசுமை வழிமுறையின்கீழ் அனைவருக்குமான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்உற்பத்தி இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லை என்ற நிலையை இந்தியா எட்டும் என்றாா் பிரதமா் மோடி.
ஜி7 நாடுகளின் தலைவா்களுடன் சந்திப்பு
ஜி7 மாநாட்டையொட்டி, பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, ஜொ்மனி பிரதமா் ஃபிரட்ரிக் மொ்ஸ், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியான் உள்ளிட்ட தலைவா்களை பிரதமா் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.
இருதரப்பு வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம், கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவா்களுடன் பிரதமா் ஆலோசித்தாா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
ரஷிய எண்ணெய்யை வாங்கும் தடையிலிருந்து விலக்கு: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது அமெரிக்கா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

மக்கள் நலத்திட்டங்களை செய்து முடிப்பதில் மோடி வல்லவா்: கனடா பிரதமா் புகழாரம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


