
கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் கேபிள் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
சோன்பிரயாக்கில் இருந்து கேதார்நாத் வரை மொத்தம் 12.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளது.
பொது - தனியார் கூட்டமைப்பில் உருவாகும் கேபிள் கார் திட்டத்துக்கு ரூ. 4,081.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிநவீன ட்ரை கேபிள் கோண்டோலா தொழில்நுட்பத்தில் அமைக்கப்படவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 3,583 மீ (11968 அடி) உயரத்தில் அமைந்துள்ளது கேதார்நாத். கௌரிகுண்டிலிருந்து 16 கி.மீ உயர மலையை ஏறி கேதார்நாத்துக்கு செல்ல வேண்டும்.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் கேதார்நாத் வருகை தருவார்கள்.
மலையேற முடியாத பக்தர்கள், குதிரைகள், பல்லக்குகள் அல்லது ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டும்.
இந்த நிலையில், கேபிள் கார் திட்டம் நிறைவடைந்தால் ஒரு மணிநேரத்தில் 1,800 பயணிகளும், நாளொன்றுக்கு சுமார் 18,000 பயணிகளும் செல்ல முடியும். கேதார்நாத் செல்லும் பக்தர்களின் ஒருவழிப் பயண நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 36 நிமிடங்களாகக் குறையும்.
இந்த திட்டத்தின் மூலம், ஆண்டு முழுவதும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளும் வியாபாரிகளும் அதிகரிப்பார்கள்.
இதற்கான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.