30 முறை துபை சென்ற நடிகை! தங்கம் கடத்தவா? வெளியான தகவல்

ஒருமுறை துபை பயணம் மேற்கொண்டால் ரூ. 13 லட்சம் இவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரன்யா ராவ்
ரன்யா ராவ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 12.56 கோடி மதிப்புடைய 14. 8 கிலோ தங்கம் கடத்திச் சென்றதாக கன்னட நடிகை ரன்யா ராவ் நேற்று முன்தினம் (மார்ச் 3) கைது செய்யப்பட்டார்.

சினிமா நடிகை என்ற புகழைப் பயன்படுத்தி தங்கம் கடத்தி வந்ததாகக் கூறப்படும் இவர், நடிகை மட்டுமல்லாமல், மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதும் கவனிக்கத்தக்கது.

பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ரன்யா ராவ் உரிய ஆவணங்கள் இல்லாத 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதற்காக இவர் பலமுறை துபைக்குச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விசாரணையைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் ரூ. 2.06 கோடி மதிப்புடைய நகைகளும் ரூ. 2.67 கோடி இந்திய ரூபாயும் இருந்தது தெரியவந்துள்ளது.

தங்கம் கடத்திவருவதற்காகவே இவர் 30 முறை துபை பயணம் மேற்கொண்டதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஒருமுறை துபை பயணம் மேற்கொண்டால் ரூ. 13 லட்சம் இவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்திவந்தாரா என்ற விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தலுக்காக மாறுபட்ட அளவுடைய மேல் அங்கியையும் இடுப்பு வார் பட்டையையும் அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நடிகை பிடிபட்டது எப்படி?

அடிக்கடி சர்வதேச பயணம் மேற்கொள்பவர்களின் பட்டியலை வருவாய் புலனாய்வுப் பிரிவு கண்காணித்து வருகிறது. அந்தவகையில் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தபோது, சோதனையில் அவர் பிடிபட்டுள்ளார்.

சோதனையின்போது தலைமைக் காவலர் ஒருவர் குறுக்கிட்டு, இவர் டிஜிபியின் மகள் எனக் கூறு குறுக்கிட்டுள்ளார். எனினும் அதிகார்கள் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத தங்கம் வைத்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து நடிகை ரன்யா ராவ்வின் தந்தையும் டிஜிபியுமான ராமச்சந்திர ராவ் கூறியதாவது,

இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டபோது அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது. இதுபோன்ற நிலைமையில் மகளைக் கண்ட மற்ற தந்தை அடையும் அதிர்ச்சியே எனக்கும் இருந்தது. என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மகள் என்னுடன் இல்லை. அவர் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை என்று நினைக்கிறேன். சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. என்னுடைய பணியில் எனக்கு எந்த இழுக்கும் ஏற்பட்டதில்லை. இதில் எந்தக் கருத்தையும் கூற நான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com