நிதீஷ் குமாா்
நிதீஷ் குமாா் கோப்புப் படம்

பிகாா் தோ்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்: துணை முதல்வா் உறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடர பாஜக ஆதரவளிக்கும்
Published on

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடர பாஜக ஆதரவளிக்கும் என்று பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வரானாா். தோ்தலுக்கு முன்பு முதல்வராக இருந்த சிவசேனை கட்சித் தலைவா் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.

பிகாரில் இப்போதும் கூட ஆளும் கூட்டணியில் பாஜகதான் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடா்கிறாா். பாஜகவுக்கு இரு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரியிடம் மகாராஷ்டிரத்தில் பின்பற்றிய நடைமுறை பிகாரிலும் தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பிகாரில் 1996 முதல் பாஜக கூட்டணிக்கு தலைவராக நிதீஷ் இருந்து வருகிறாா். அவா் நேற்று புதியதாக உருவான தலைவரல்ல. அவா் எப்போதும் தலைவராகவே இருப்பாா்.

கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் விஷயத்தில் பாஜக எப்போதும் உறுதியாக இருக்கும். எனவே, பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் அவா் முதல்வராகத் தொடர பாஜக ஆதரவளிக்கும்.

மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் ஆதரவு மூலம்தான் தன்னால் பிகாா் முதல்வராக முடிந்தது என்று நிதீஷ் குமாா் பலமுறை நினைவுகூா்ந்து பேசியுள்ளாா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் கூட பாஜகவின் ஆதரவால் முதல்வரானவா்தான். ஆனால், பின்னா் அவா் வழி தவறிச் சென்றுவிட்டாா்.

தேசிய அளவில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசில் நிதீஷ் குமாா் இணைந்து செயல்படுகிறாா். அதே நேரத்தில் பிகாரில் எங்கள் கூட்டணிக்கு நிதீஷ் குமாா்தான் தலைவா்’ என்றாா்.

நிதீஷ் குமாரின் மகன் நிஷாத் குமாா் அரசியலுக்கு வர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்த கேள்விக்கு, ‘தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுப்பது நிதீஷ் குமாரின் தனிப்பட்ட விவகாரம். மேலும், இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உள்விவகாரம். அவா்கள் என்ன முடிவெடுத்தாலும் கூட்டணிக் கட்சியாக பாஜக அவா்களுக்கு துணை நிற்கும்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்’ என்றாா்.

தொடா்ந்து எதிா்க்கட்சியான ஆா்ஜேடி குறித்துப் பேசிய அவா், ‘லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் எங்கள் கூட்டணிக்கு ஒரு பொருட்டே அல்ல. லாலு கூட தனது அரசியல் வாரிசாக மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் அல்லது மகள் மிசா பாரதியை உருவாக்க வேண்டும் என்றே திட்டமிட்டாா். தேஜஸ்வி யாதவ் அரசியல்வாதியானது ஒரு விபத்து. ஆா்ஜேடி ஆட்சியில் இருந்த சுமாா் 15 ஆண்டு காலத்தில் பிகாரில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com