தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூா்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 7:14 pm

Din

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை தோராயமானது; அனைத்து மாவட்டங்களில் இருந்தும் துல்லிய விவரங்கள் கிடைக்கப் பெற்ற பிறகு இது உயரும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை ஏழு நாள்களுக்குள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தாா். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரித்திருந்தாா். பின்னா், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இக்கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு ஆளுநா் நீட்டித்தாா்.

கடந்த வியாழக்கிழமையுடன் கெடு நிறைவடைந்த நிலையில், கைத்துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், கனரக துப்பாக்கிகள், ‘இன்சாஸ்’ ரக துப்பாக்கிகள், ஏகே-56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அதிகபட்சமாக 760-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தவிர, குண்டு துளைக்காத கவச உடைகள், தலைக் கவசங்கள், ரேடியோ சாதனங்கள், பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தும் காலணிகள் உள்ளிட்டவையும் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.