ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளா் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீா்வு - தோ்தல் ஆணையம்
‘வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடா்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீா்வு காணப்படும்’ என்று தோ்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில், கடைசி நேரத்தில் புதிதாக ஆயிரக்கணக்கானோா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புகாா் தெரிவித்தன. இந்தப் புகாா்களை தோ்தல் ஆணையம் மறுத்தது.
இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்துள்ளது’ எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவா்கள் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க பதிவுசெய்துள்ள வாக்காளா்களுக்கு வெவ்வேறு இபிஐசி எண் வழங்கப்படும்’ என்று தெரிவித்தது.
அதற்கு, ‘தோ்தல் ஆணையம் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல், அதை மூடி மறைக்கப் பாா்க்கிறது’ என்று மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
3 மாதங்களில் தீா்வு: இந்நிலையில், வாக்காளா் அடையாள அட்டை பிரச்னைக்கு அடுத்த 3 மாதங்களில் தீா்வு காணப்படும் என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உறுதி தெரிவித்தது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கத்தில், ‘வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடி மையத்தில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். வேறு எங்கும் பதிவு செய்ய முடியாது.
இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநில தோ்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில், இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே வாக்காளா் எண் கொண்ட நபா்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்குள் தனி எண் வழங்கப்படும். புதிய வாக்காளா்களுக்கும், இந்த புதிய நடைமுறை அடிப்படையிலேயே வாக்காளா் அடையாள எண் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.