மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தை பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு நிறுத்திவைப்பு.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

11 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது.

இந்த வழக்கில், குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்தது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என்று நீதிபதி ராம் மனோகர் நாராயணன் என்பவர் தீர்ப்பு வழங்கினார்.

இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டபோது, ”இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பை நிறுத்திவைப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

அதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அலாகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு சமர்ப்பித்து பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கில் பவன், ஆகாஷ் ஆகிய இருவரும் 11 வயது குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து அவரது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்ததாகவும் ஆட்கள் வந்ததைத் தொடர்ந்து அவர்கள் தப்பியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குற்றவாளிகள் தங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான எந்த முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை என்று வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயணன், “பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைப் பிடித்து அவரது கீழ் ஆடையை இறக்க முயன்று அதன் நாடாவை இழுத்தனர். பின்னர் அந்தக் குழந்தையை கால்வாயின் கீழ் இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் ஆட்கள் வந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர் என்பதை நிரூபிக்க இந்த உண்மை மட்டுமே போதுமானதாக இல்லை. ஏனெனில், இந்த உண்மைகளைத் தவிர, பாலியல் வன்கொடுமை செய்ய வேறு எந்தச் செயலையும் அவர்கள் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை மாற்றியுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குறைந்தபட்ச தண்டனை உள்ள பிரிவுகளான 354-பி ஐபிசி (பாதிக்கப்பட்டவரைத் தாக்குதல், ஆடையை அவிழ்த்தல்), மற்றும் போக்ஸோ பிரிவு 9/10 -ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில், முதன்மை குற்றச்சாட்டாக பாலியல் வன்கொடுமை முயற்சி இல்லை என்றும் அதற்குப் பதிலாக, பெண்ணைத் தாக்குதல், நிர்வாணப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com