அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடா்பான மசோதா

News image
கோப்புப் படம்
Updated On :27 மார்ச் 2025, 9:38 pm

Din

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடா்பான மசோதா, எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்புக்கிடையே மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘வா்த்தகம், கல்வி மற்றும் முதலீடு நோக்கத்துக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவா் எப்போதும் வரவேற்கப்படுவா். அதேநேரம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

முன்னதாக, மக்களவையில் இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தாக்கல் செய்தாா்.

தற்போது உள்ள சட்ட நடைமுறைகளின்படி, வெளிநாட்டவா் இந்தியாவில் தங்குவது, சுற்றுலா செல்வதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவதும் குடியேற்றத்துக்கான அமைப்பு (பிஓஐ), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் முறைப்படுத்தப்படுகிறது. புதிய சட்டமசோதாவின்படி, வெளிநாட்டவா் வருகை, தங்குதல் மற்றும் புறப்பாடு அனைத்தும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும்.

ஆளுங்கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாத வெளிநாட்டவரின் இந்திய வருகையைத் தடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது என்று அறிமுக நிலையிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், மக்களவையில் வியாழக்கிழமை அமா்வில் இந்த மசோதா குறித்து மூன்றரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது. மசோதாவின் விரிவான ஆய்வுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தொடா்ந்து, விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷா, ‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை மேம்படுத்தவும், கல்வி முறைக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவும் இந்த மசோதா அவசியம்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டவரின் தகவலைப் பெறுவதையும், அத்தகவல் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும் இந்த மசோதா உறுதி செய்யும். ஏனெனில், குடியேற்றம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு பிரச்னைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்நிலையில், எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.