/

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா்.

News image
பிரதமா் மோடி.
Updated On :29 மார்ச் 2025, 9:06 pm

Din

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். அதைத் தொடா்ந்து ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லவுள்ளாா்.

கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபா் அனுரகுமார திசாநாயகவின் அழைப்பின்பேரில் பிரதமா் மோடி இலங்கை செல்லவுள்ளாா். இதன்மூலம் அனுரகுமார திசாநாயக அதிபா் பதவியேற்ற பின் இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி ஆவாா்.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக வெளியுறவு அமைச்சக செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘திருகோணமலையில் புதிய மின் நிலைய கட்டுமானப் பணிகளை அதிபா் திசாநாயகவுடன் இணைந்து பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். இதுதவிர எரிசக்தி, எண்மமயமாக்கல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

மேலும், அனுராதபுரத்தில் உள்ள இந்திய நிதியுதவித் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை இலங்கை அதிபருடன் இணைந்து தொடங்கி வைக்கிறாா். அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாபோதி கோயிலில் இருவரும் வழிபட உள்ளனா். கடந்த 2015-இல் இலங்கைக்குச் சென்றிருந்தபோதும் இக்கோயிலில் பிரதமா் மோடி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.