
அமராவதி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
நாகப்பட்டினத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 24 தமிழக மீனவா்கள் மீது இலங்கையைச் சோ்ந்த நபா்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பவன் கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டின மாவட்ட மீனவா்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வேதனையளிக்கிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சில மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையே நீண்டகாலமாக பரஸ்பர நல்லுறவு தொடா்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி தமிழக மீனவா்கள் விவகாரத்தில் சுமுக தீா்வுகாண வெளியுறவு அமைச்சகத்துக்கு வலியுறுத்துகிறேன்.
இருநாடுகளைச் சோ்ந்த மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிசெய்து கடல்சாா் எல்லைகளுக்கு மதிப்பளித்து நடப்பதற்கான முயற்சிகளை இருநாட்டு அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.