நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது!

ஆடம்பர வாழ்க்கை மோகம், விரைவான வருமானத்திற்காக மோசடியில் ஈடுபட்ட கும்பல்..
நீட் தேர்வு
நீட் தேர்வுCenter-Center-Delhi
Updated on
1 min read

ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நீட் இளநிலை தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கொண்ட கும்பலை ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் நீட் இளநிலை தேர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நீட் தேர்வெழுத ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் ஒரு கும்பல்.

கர்னி விஹார் ஜக்தம்பா நகரில் அமைந்துள்ளது ஏபிடி பிரிஸ்டைன் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இன்று(திங்கள் கிழமை) 5 பேரை போலீஸார் கைது செய்ததாக தெரிவித்தனர்.

கைதானவர்களிடமிருந்து போலி தேர்வு ஆவணங்கள், புளூடூத் சாதனங்கள், 4 சிம் கார்டுகள், மொபைல் போன்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஒரு ஸ்கார்பியோ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சோமுவின் சிமன்புராவைச் சேர்ந்த அஜித் குமார் பராலா (26), சமோட்டின் குஷல்புராவைச் சேர்ந்த சோஹன் லால் சௌத்ரி (26), ஹர்மடாவின் பிச்பாடியைச் சேர்ந்த ஜிதேந்திர சர்மா (24) ஆகியோர் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தித் தேர்வில் தேர்ச்சி பெற உதவத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சோஹனும் அஜித்தும் மோசடி வழிகளில் தேர்வெழுதியவர்கள் வெற்றி பெறுவதற்காக, தேர்வர்களிடமிருந்து பெரும் தொகையை வசூலித்ததும் தெரிய வந்தது.

ஜிதேந்திர சர்மா போலியாக தேர்வெழுத இருந்தார். மேலும் அந்தக் கும்பல் செய்யறிவு (AI) பயன்படுத்தி போலி நுழைவுச் சீட்டினை தயாரித்து புகைப்படங்களை மாற்றி இணைத்துள்ளது. ரோஹித் கோராவின் சார்பாக சர்மா நீட் தேர்வில் கலந்துகொள்ளவிருந்தார். மேலும் மே 27 அன்று சஞ்சய் சௌத்ரி என்ற மற்றொரு நபருக்குப் பதிலாக துணை மருத்துவத் தேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

விசாரணையின்போது வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், தேர்வாளர்கள் சோமுவைச் சேர்ந்த ரோஹித் கோரா(20), சமோட்டைச் சேர்ந்த சஞ்சய் சௌத்ரி(19) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், சோஹனும் அஜித்தும் ஜோராவர் சிங் கேட் அருகே உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் முதுகலை மாணவர்கள் என்பதும், ஜக்தம்பா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வசிப்பதும் தெரியவந்தது. ஆடம்பர வாழ்க்கை முறை, விரைவான வருமானத்தின் மோகத்தால் அவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஜிதேந்திர சர்மா கர்நாடகாவில் உள்ள காப்பர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் ஆவார், மேலும் 2024இல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com