வெற்றிபெறுவதற்காக பயிற்சி.. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவம் பதிவு

வெற்றிபெறுவதற்காகவே பயிற்சி எடுக்கப்பட்டுள்ளது என ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
Updated on
2 min read

ஏப்ரல் 22ஆம் தேதி நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு முன்பு, இந்திய ராணுவம் எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியானதாகவும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, இந்திய ராணுவம், தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் 'தாக்குதலுக்குத் தயார், வெற்றிபெற பயிற்சி எடுத்திருக்கிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் விடியோவில், இந்திய முப்படைகளின் ஆயுதங்கள், வெடிபொருள்கள், டேங்கர்களும் இடம்பெற்றுள்ளன.

"ஒரே படை, இரக்கமற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல், அனைத்து முனையிலும் ஆதிக்கம் செலுத்தியது" என்று முந்தையப் பதிவுக்குப் பிறகு, சில நிமிடங்களில் மற்றொரு பதிவு இடப்பட்டுள்ளது. இந்தப் பதிவானது, ஜெய்ஷ்-ஏ-முகமது கோட்டையான பஹாவல்பூர் மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பாவின் தளமான முரிட்கே உள்ளிட்ட பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.44 மணிக்கு, சற்று நேரத்துக்கு முன்புதான், இந்திய ராணுவப் படையானது, ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தி முடித்திருக்கிறது என்று பதிவிடப்பட்டது.

மிகக் கவனத்துடன் துல்லியமாக கணக்கிட்டு எந்த தாமதமும் இன்றி சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது, பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை

லஷ்கர்-ஏ-தொய்பாவின் பயங்கரவாதிகளைக் கையாளும் மிகப் பெரிய தளமாக லாகூர் அருகே உள்ள முரிட்கே தளமும், ஜெய்ஷ்-ஏ-முகமது கோட்டையாக பஹாவல்பூர் முகாம் செயல்பட்டு வந்தது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில், இருந்த இதர இலக்குகளான கோட்லி, முஸாபராபாத் ஆகியவை, இவ்விரு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தங்குமிடமாகவும் பயிற்சி தளமாகவும் இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், பாரத மாதாவுக்கு ஜெய் என்று பதிவிட்டிருந்தார். அதே நேரத்தில், இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளத்தில், நீதி வழங்கப்பட்டது என்று பதிவிடப்பட்டது.

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் மனைவிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடத்தப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு சிந்தூர் தாக்குதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிந்தூர் என்றால், திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் அணியும் குங்குமத்தைக் குறிப்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com