சவூதி தலைநகா் ரியாத் சென்றடைந்த வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவினா். உடன் அசாதுதீன் ஒவைசி எம்.பி.
சவூதி தலைநகா் ரியாத் சென்றடைந்த வைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவினா். உடன் அசாதுதீன் ஒவைசி எம்.பி.

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நிலைப்பாடு: தென்னாப்பிரிக்காவின் முக்கியக் கட்சி ஆதரவு

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது பெரிய கட்சியான ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
Published on

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது பெரிய கட்சியான ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்புகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் இந்திய அரசு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, முதல்கட்டமாக அந்நாட்டு எம்.பி.க்களைச் சந்தித்தது.

தொடா்ந்து, ஜனநாயக கூட்டணி தலைவரும் அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சருமான ஜான் ஸ்டீன்ஹியுசென் மற்றும் ஜனநாயகக் கூட்டணியின் பிற உறுப்பினா்களுடன் அனைத்துக் கட்சிக் குழு கலந்துரையாடியது.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்புக்கும் ஜனநாயகக் கூட்டணி ஆதரவுக்கரம் நீட்டியது.

தென்னாப்பிரிக்காவைத் தொடா்ந்து எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு இக்குழு அடுத்தடுத்து பயணிக்கிறது.

இத்தாலியில்...: இத்தாலி சென்றுள்ள பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, இந்தியா-இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவா் செனட் உறுப்பினா் கியுலியோ டொ்ஸி மற்றும் குழு உறுப்பினா்களுடன் சந்தித்து, இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பை விளக்கினா்.

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சா்வதேச ஒத்துழைப்புக்கான துணைச் செயலா் மரியா திரிபோடியுடனும் அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சவூதி அரேபியாவில்...:

சவூதி அரேபியாவில் உள்ள நைஃப் அரபு பாதுகாப்பு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் சிந்தனைக் குழுவான வளைகுடா ஆராய்ச்சி மையத்தை பாஜக எம்.பி. வைஜயந்த் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள், கடந்த மே 21-ஆம் தேதிமுதல் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கான பயணத்தைத் தொடங்கி, இந்தியாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com