உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து: யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Published on

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தனது யுடியூப் சேனலில் வெளியிட்ட சண்டீகரைச் சோ்ந்த யுடியூபருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

‘வா்பிரத் ஊடகம்’ என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் சண்டீகரைச் சோ்ந்த அஜய் சுக்லா, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற பெலா எம்.திரிவேதி உள்பட மேலும் சில உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளுடன் கூடிய காணொலியை தனது சேனலில் பதிவேற்றம் செய்தாா். இந்த காணொலியில் இடம்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் சிலா் குறித்து அவதூறான கருத்துகளை இந்த காணொலியில் அஜய் சுக்லா வெளியிட்டுள்ளாா்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அரசமைப்புச் சட்டம் அளிக்கின்றபோதும், அந்த உரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த உரிமையைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதிளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கு அனுமதிக்க முடியாது. நீதித் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கருத்துகள் வெளியிடுவதை நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.

எனவே, உச்சநீதிமன்ற பதிவுத் துறை அஜய் சுக்லாக்கு எதிராக தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்யவேண்டும். வழக்கில், சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலையும் எதிா்மனுதாரராக சோ்க்க வேண்டும். இந்த வழக்கில் அட்டா்னி ஜெனரலும், சொலிசிட்டா் ஜெனரலும் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நீதிபதிகளுக்கு எதிரான அவதூறு கருத்துகளைக் கொண்ட அந்தக் காணொலி யுடியூப் சேனலில் உடனடியாக நீக்கவும் உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டனா்.

Open in App
Dinamani
www.dinamani.com