பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

நிதீஷ் கூட்டணியின் வளர்ச்சி செயல்திட்டத்துக்கும் ஆர்ஜேடி கட்சியின் காட்டாட்சிக்கும் இடையிலான போட்டிதான் சட்டப்பேரவைத் தேர்தல் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷாX | Amit Shah
Published on
Updated on
2 min read

நிதீஷ் கூட்டணியின் வளர்ச்சி செயல்திட்டத்துக்கும் ஆர்ஜேடி கட்சியின் காட்டாட்சிக்கும் இடையிலான போட்டிதான் சட்டப்பேரவைத் தேர்தல் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கோபால்கஞ்ச் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களிலும், வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரிலும் சனிக்கிழமை பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டிருந்தார். எனினும், மோசமான வானிலை காரணமாக அவரால் இப்பகுதிகளுக்கு செல்ல இயலவில்லை.

இப்பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் அமித் ஷா காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: ``பிகாரில் ஆர்ஜேடி தலைவர் வாலு பிரசாத் ஆட்சி நடத்திய போது அவரது மனைவி ராப்ரிதேவியின் சகோதரரான சாது யாதவ் அராஜகங்களை நிகழ்த்தி வந்தார். மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கடந்த காலத்தில் நடைபெற்ற காட்டாட்சிதான் நடைபெறும்.

பிகாரின் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதைத் தீர்மானிப்பதுதான் பிகார் சட்டப் பேரவைத் தேர்தல், ஒருபுறம் இங்கு காட்டாட்சியை நடத்தியவர்கள் (ஆர்ஜேடி கூட்டணி) இருக்கின்றனர்.

மறுபுறம் பிகாரில் வளர்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் நிதீஷ் குமாரும் இருக்கின்றனர். வளர்ச்சி செயல்திட்டத்துக்கும் காட்டாட்சிக்கும் இடையிலான போட்டி தான் இத்தேர்தல்.

கோபால்கஞ்ச் மக்கள் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஆர்ஜேடி கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இத் தேர்தலிலும் அவர்கள் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இங்கு சாது யாதவ் நிகழ்த்தி வந்த அராஜகங்களை கோபால்கஞ்ச் மக்களைவிட சிறப்பாக அறிந்தவர்கள் யாருமில்லை.

ஆர்ஜேடி ஆட்சிக்காலத்தில் மத்திய பிகார் பகுதியில் பல்வேறு கிராமவாசிகள் படுகொலை செய்யப் பட்டனர். மாநிலத்தின் 7 மாவட் டங்களில் நக்ஸலைட் குழுக்களுக்கும் உயர்ஜாதி பண்ணையார்கள் நடத்திவந்த ராணுவம் போன்ற அமைப்புகளுக்கும் இடையே ரத்தம் தோய்ந்த மோதல்கள் நடைபெற்று வந்தன.

அண்மையில், பிகாரைச் சேர்ந்த 1.41 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் முதல்வர் நிதீஷ்குமாரும் பிரதமர் மோடியும் தலா ரூ.10,000 செலுத்தினர். இது தவிர, பிகாரைச் சேர்ந்த 27 லட்சம் விவசாயிகளுக்கு நாங்கள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை வழங்குகிறோம். மாநிலத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் திறக்கப்படும்.

பிகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை நடத்தியதன் மூலம் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டார். அவர் விரும்பும் வரை யாத்திரைகனை நடத்தட்டும்.

நாட்டை விட்டு ஒவ்வொரு ஊடுருவல்காரரும் விரட்டப்படுவது உறுதி. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் அதுதான். அந்தவகையில் நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

சீதாமர்ஹி மாவட்டத்தில் சீதா தேவி பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் ரூ.85 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.

அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் அவரை அக்கட்சி எப்போதுமே அவமதித்து வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மறுத்தது’’ என்று அமித் ஷா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com