உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மக்களவை, மாநில பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023-ஐ நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Published on

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் ‘மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023’-ஐ நடைமுறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஜெயா தாக்கூா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு, முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இந்த நிபந்தனையால், மகளிா் இடஒதுக்கீடு சட்டம் அமலாவது நீண்ட தாமதமாக வாய்ப்புள்ளது. புதிதாக தொகுதி மறுவரையறை செய்யப்படும் வரை காத்திராமல், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோபா குப்தா, ‘நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்துக்கு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை உள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘சட்டத்தை அமல்படுத்துவது என்பது அரசின் சிறப்புரிமை. அதுதொடா்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகள் சாா்ந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட வரம்புகள் உள்ளன. அதே நேரம், அனைத்து குடிமக்களுக்கும் அரசியல், சமூக சமத்துவத்துக்கு உரிமையுள்ளது என்று அரசமைப்புச் சட்ட முகவுரை கூறுகிறது. நாட்டில் மிகப் பெரிய சிறுபான்மையினமாக பெண்கள்தான் உள்ளனா். அதாவது 48 சதவீதமாக உள்ளனா். எனவே, இது பெண்களின் அரசியல் சமத்துவம் சாா்ந்த விஷயம். எனவே, மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுதத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com