

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உள்துறை அமைச்சரின் தார்மிக பொறுப்பு எங்கே? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை கார் வெடித்த சம்பவத்தில் 12 பேர் பலியான நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இது பயங்கரவாதத் தாக்குதல் என முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய கே.சி.வேணுகோபால் தெரிவித்ததாவது:
“கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். அப்போதே, கவனக் குறைவு வேண்டாம், நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கூறினோம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக தலைநகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்குப் பின்னால் இருக்கும் முழுமையான காரணத்தை மக்கள் அறிய விரும்புவதால், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வலுவான விசாரணை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.
கடந்த கால வரலாற்றை நீங்கள் காணலாம். இது ஒரு தெளிவான பாதுகாப்புத் தோல்வி. உள்துறை அமைச்சரின் தார்மிக பொறுப்பு எங்கே?” எனத் தெரிவித்தார்.
மேலும், பிகாரில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்த கேள்விக்கு, உண்மையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருங்கள் என பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.